தென் அமெரிக்க நாடான சிலியின் அடுத்த அதிபராக மிச்சேல் பாச்லெட் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாச்லெட் ஏற்கெனவே 2006 முதல் 2010 வரை சிலி அதிபராக இருந்துள்ளார். சிலியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்ற இவர், தற்போது 2வது முறையாக அதிபராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடியும் போது, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பதவி யேற்கிறார் பாச்லெட். பாச்லெட் வெற்றி பெற்றதை அவரது போட்டியாளர் ஈவ்லின் மத்தேய் ஒப்புக்கொண் டுள்ளார். “தற்போதைய நிலையில் பாச்லெட் வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது. அவரை வாழ்த்துகிறேன். அவரிடம் தனிப்பட்ட முறையில் பிறகு பேசுவேன்” என்றார் ஈவ்லின் மத்தேய்.
சிலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாச்லெட் 62.59 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்தேய் 37.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. சிலியில் அதிபர் பதவிக்கு இரு பெண்கள் இடையே போட்டி நிலவியது இதுவே முதல் முறை.
சிலியில் இதுவரை வாக்களிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. கட்டாய வாக்குப்பதிவு நீ்க்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.