இராக்கின் மோசூல் நகரின் மேற்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த 30% பகுதிகள் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் உயரடுக்கு பயங்கரவாத தடுப்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இராக் மத்திய காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மோசூல் நகரில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த 30% பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இராக்கின் அரசுப் படைகள் பழமையான நகரமான பாப் அல் டாப் பகுதியில் நுழைந்துள்ளது. அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சண்டை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது"
17 மாவட்டங்கள் மீட்பு
ராணுவ மூத்த அதிகாரி மான் அல் சாதி பத்திரிகையாளரிடம் கூறும்போது, "ஐஎஸ் தீவிரவாதிகள் மோசூல் நகரில் தங்களது கட்டுபாட்டை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. ஐஎஸ் வசமிருந்த 40 பகுதிகளில் 17 பகுதிகளை இராக் அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மோசூலின் மேற்குப் பகுதியைக் கைப்பற்ற சில காலம் தேவைப்படும். ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து கடந்த வாரத்தில் மட்டும் 65,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்" என்று கூறினார்.
இராக்கின் 2-வது மிகப்பெரிய நகர் ஆகும். கடந்த 2014 ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மோசூலை கைப்பற்றினர். அந்த நகரை மீட்க இராக் ராணுவம் கடந்த 6 மாதங்களாக தீவிரமாகப் போரிட்டு வருகிறது.