உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாகவே இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என பிரதமர் மன்மோகன் சிங் முடிவு எடுத்தார் என வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு சல்மான் குர்ஷித் பேட்டி கொடுத்தார். அப்போது கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஏன் பங்கேற்கவில்லை என கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது: மாநாட்டில் பங்கேற்பதில்லை என பிரதமர் முடிவு எடுத்ததற்கு முன் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டன. டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன் நடக்கும் திருப்பமுனைத் தேர்தல்கள் இவை.
பொருளாதார சீர்திருத்தங்கள், பொருளாதார பிரச்சினைகள் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். சில வாரங்களில் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இவை எழுப்பப்பட உள்ளன. மிக மிக முக்கியத்துவம் மிக்க இந்த பிரச்சினைகளில் ஆழ்ந்துள்ளதும் பிரதமர் பங்கேற்காததற்கு காரணம்.
இன்னும் சொல்லப்போனால் இலங்கை தொடர்பான பிரச்சினைகளில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதும் பிரதமர் எடுத்த முடிவுக்கு காரணம். இலங்கையில் இறுதி கட்டப்போர் முடிந்தபிறகு இடம் பெயர்ந்து தவிக்கும் மக்களுக்கான மறுகுடியமர்த்தல் பணி, மறுகட்டமைப்பு போன்றவை முக்கியமான பிரச்சினைகள் ஆகும் என்றார் குர்ஷித்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த அத்தனை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை மனதில் கொண்டே சல்மான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே இலங்கைக்கு செல்வதில்லை எனவும் தனக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்புவது எனவும் பிரதமர் முடிவு செய்ததாக நான் கருதுகிறேன். அதன்படியே நான் கொழும்பு வந்துள்ளேன் என்றார் குர்ஷித்.
இலங்கை பற்றியும் அதன் இப்போதைய நிலைமை பற்றியும் குறிப்பிட்ட குர்ஷித், 27 ஆண்டுகளாக இலங்கையில் நடந்த சம்பவங்களை மிகச் சாதாரணமானவை என்று ஒதுக்கிவிடமுடியாது.அந்த சம்பவங்கள் நடந்து முடிந்து அவற்றை சமாளித்தாகிவிட்டது. அதைப் பற்றியே பேசாமல் வேறு விஷயங்கள் மீது நாம் பார்வை செலுத்த வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக்கொண்டு புதிய அணுகுமுறையை கையாள்வது அவசியமாகும். கூடிய மட்டும் உண்மை என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்து வேறுபாடுகளையும் கசப்புணர்வையும் ஒதுக்கிவைத்து சமரசம் உருவாக வழி காணவேண்டும் என்றார் குர்ஷித்.