ஜப்பானில், புல்லட் ரயில் பாதை அருகே வர்த்தக நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து தலைநகரில் இருந்து செல்லும், தலைநகருக்கு வரும் புல்லட் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஜப்பான் யுராகுச்சோ ரயில்நிலையத்தின் அருகே கின்ஸா எனும் சொகுசு வர்த்தகப் பகுதி உள்ளது. இங்கு புத்தாண்டு விற்பனை உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் ரயில் நிலைய நுழைவாயில் அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ரயில் பாதை அருகே தீ விபத்தின் பாதிப்புகள் இருந்ததால், புல்லட் ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.
தலைநகர் டோக்கியோவில் இருந்து மேற்குப் பகுதி வர்த்தக நகரங்களான நகோயா மற்றும் ஒஸாகாவுக்குச் செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோன்று, ஒஸாகாவில் இருந்து டோக்கியாவுக்கு வரும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் டோக்கியோவின் வடக்குப் பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. புத்தாண்டு விடுமுறைக்குப் பின் அலுவலகங்களுக்கும், நகரப்பகுதிக்கும் திரும்பிய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டனர்.
ரயில் நிலையங்களில் குழந்தைகள், குடும்பம் சகிதமாக ஏராளமானவர்கள் காத்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை மதியம் புல்லட் ரயில்கள் சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், ரயில் சேவை முழுமையடையவில்லை.