இந்தோ - ரஷ்யா உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா பிரதமர் திமித்ரி மெத்வதேவை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா மிகவும் நெருக்கமானதும் மதிப்புமிக்கதுமான நட்பு நாடு என்று ரஷ்யா பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 10 நாள் பயணமாக மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜித் தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
முதற்கட்ட பயணமாக மியான்மர் நாட்டுக்கு அவர் சென்றார். மியான்மர் தலைநகர் நேபிடாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 12-வது இந்தியா - ஆசியான் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின்போது ஆசியான் நாடுகளின் பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார்.
இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி, ரஷ்யா பிரதமர் மெத்வதேவை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவை விரிவுபடுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.
"இந்தியா எங்களுடைய மிகவும் நெருக்கமான மற்றும் மதிப்புமிக்க நட்பு நாடு" என்று ரஷ்யா பிரதமர் மெத்வதேவ், நரேந்திர மோடியிடம் கூறினார். பிரதமர் மோடி பதில் அளிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
டிச.15-ல் இந்தியா வருகை:
ரஷ்ய பிரதமர் மெத்வதேவ், அடுத்த மாதம் 15-ம் தேதி இந்தியா வருகிறார்.
முன்னதாக, கடந்த ஜூலையில் பிரேசிலில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது, ரஷ்ய பிரதமரை சந்தித்த மோடி, இந்திய வருகையின்போது, மெத்வதேவ் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.