உலகம்

ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள் - பாகிஸ்தானில் விநோத சம்பவம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் வங்கியில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்த இரு சகோதரிகள் அப்பணத்தை வங்கி வாயிலில் வைத்தே தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்கள் இருவரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பிலால் நகரில் உள்ள பாகிஸ்தான் தேசிய வங்கியில் நாஹீத் (40), ரூபினா (35) ஆகியோர் ரூ.28 லட்சம் இருப்பு வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இருவரும் வங்கிக்கு சென்று தங்கள் பணத்தில் ரூ.17 லட்சத்தை திரும்ப எடுக்க வேண்டுமென்று கூறினர். சில நடைமுறைகளை முடிக்க வேண்டியிருந்ததால் இருநாள்கள் கழித்து வருமாறு அந்த சகோதரிகளை வங்கி மேலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் அவர்களது பணம் ரூ.17 லட்சம் திரும்ப கொடுக் கப்பட்டது. அதனை எடுத்துக் கொண்டு வங்கி வாசலுக்கு வந்த இருவரும் அதனை அங்கேயே ஒவ்வொரு தாளாக தீவைத்துக் கொளுத்தத் தொடங்கினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்களைத் தடுக்க முயற்சித் தனர். அப்போது நாஹீத் மறைத்து வைத்திருத்த கைத்துப்பாக்கியை எடுத்து அருகில் வரக்கூடாது என்று மிரட்டத் தொடங்கினார். எங்கள் பணத்தை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று அவர் கூச்சலிட்டனர். இதனால் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிவதை வேடிக்கை பார்க்க மட்டுமே மற்றவர்களால் முடிந்தது.

இது தொடர்பாக போலீஸா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்தபோது எரிந்து போன சாம்பல் மட்டுமே மிச்சம் இருந்தது.

அந்த சகோதரிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்களது தந்தை கொலை செய்யப்பட்டபின்பு அவர்கள் குடும்பத்தினர் பலர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது தெரியவந்தது.-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT