உக்ரைனில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைப்பதற்காக ஒப்பந்தத்தில் அந்நாட்டின் அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்து விட்டார்.
இதையடுத்து உக்ரைனில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கீவ் நகரில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2004ல் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இது மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் நேற்று ஆளும் கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை முன்னாள் சாம்பியனும் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான விடாலி கிளிட்ச்கோ இதற்கான வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில், “ரஷியாவின் நிர்பந்தம் காரணமாகவே, உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடவில்லை. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அரசு துரோகம் இழைத்துவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு மற்றொரு முக்கிய எதிர்க்கட்சி யும் ஆதரவு தெரிவித்துள்ளது.
450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு போதுமான ஆதரவு கிடைக்குமா, தீர்மானம் வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. இதனிடையே அதிபருக்கு எதிராக நேற்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை முற்றுகை யிட்டனர். இவர்களுக்கு எதிராக கலவரத் தடுப்பு போலீசாரும் நாடாளுமன்றத்தை சுற்றிலும் அரண் அமைத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.