உலகம்

அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் இலங்கை பயணம்

செய்திப்பிரிவு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால், 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கை வந்து சேர்ந்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, சர்வதேச விசாரணையை ஏற்கவேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிஸ்வால் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய வம்சாவளி அமெரிக்கரான பிஸ்வால், இலங்கைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்துக்கும் அவர் பயணம் செய்கிறார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும் வழியில் அவர் பிரிட்டன் செல்கிறார். பிரிட்டன் வெளியுறவுத் துறை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாடு சுதந்திரமான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என கருதப்படுகிறது.

பிஸ்வாலின் பயணம் குறித்து இலங்கையின் “ஐலேண்ட்” நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் நெருக்குதல் கொடுத்து வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக 2012 மற்றும் 2013ல் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, அதிபர் ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா அண்மையில் ஜெனீவா மற்றும் வாஷிங்டன் சென்றார். பல்வேறு மூத்த அமைச்சர்களும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தனர். இந்த வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் சில நாள்களுக்கு முன் இந்தியா சென்றிருந்தார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளின் நெருக்குதலுக்கு பணியவேண்டாம், அமைதி காக்கவேண்டும் என்று சர்வேதேச சமூகத்திடம் இலங்கை கோரி வருகிறது.

SCROLL FOR NEXT