உலகம்

உணவுப் பாதுகாப்புக் கொள்கையில் சமரசம் இல்லை: ஆனந்த் சர்மா

செய்திப்பிரிவு

உணவுப் பாதுகாப்புக் கொள்கையில் இந்தியா எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்று மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா உறுதிபட தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் 9-வது கூட்டம், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நேற்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கியது.

இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, உலக வர்த்தக அமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போது உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினை விரிவாக எடுத்துரைத்தார்.

அப்போது அவர்: "விவசாயம் என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள 4 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை உள்ளது. உணவுப் பாதுகாப்புக் கொள்கையில் இந்தியா எவ்வித சமரசத்தையும் ஏற்காது. பொதுமக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அளவிலான தானியங்களை தேக்கி வைத்தல் என்ற கொள்கையை உலக நாடுகள் மதிக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் பழைய கோட்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா கோரிக்கை:

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தும் போது மானிய உச்ச வரம்பை மீற நேர்ந்தால், எந்தவிதமான அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என்ற வகையில், உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்த வரையறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜிம்பாப்வே ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இது போன்று திருத்தம் எதையும் கொண்டு வரக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT