அமெரிக்க அதிபர் ஒபாமா அடிக்கடி பிரதமர் மோடியை சந்திப்பதன் பின்னணி குறித்து சீன அரசு ஊடகம் வியப்பு கலந்த எச்சரிக்கை தொனியுடன் கட்டுரை எழுதியுள்ளது.
அதாவது “சீனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா எழுச்சியுற முடியாது” என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
“ஒபாமா பதவிக்காலம் இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் இருதரப்பு உறவுகளில் தன்னைப் பின்பற்ற ஒரு முறையை ஒபாமா அளிக்க முயற்சி செய்கிறார், மோடிக்கோ இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் திட்டம். இருவரும் அடிக்கடி சந்திப்பதற்கு பாதுகாப்பு உறவுகளின் பரிசீலனைகளே காரணம். 2014-ம் ஆண்டில் பதவியேற்றது முதல் மோடி 4-வது முறையாக அமெரிக்கா செல்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க மோடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றோ அமெரிக்க ராணுவ கொடியசைப்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு மோடிக்கு அளிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் திரைக்குப் பின்னால் உள்ளது ராணுவம் தொடர்பான கூட்டுறவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிய பகுதிகளில் இந்தியாவின் ராணுவ மதிப்பின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நினைக்கிறது, இதோடு பொருளாதார ஆற்றல், மற்றும் கொள்கை ரீதியிலான அனுகூலங்கள் இதில் உள்ளன.
இந்தியாவை ஆரத் தழுவுவதன் மூலம் ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்கா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது.
மதிப்பீடுகளின்படி பார்த்தால் அமெரிக்காவின் மதிப்பீடும் இந்தியாவின் மதிப்பீடும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை. இந்தியா தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கைகள் கொண்டது மற்ற முக்கிய நாடுகளுடனான விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.
மேலும் மோடி ஒரு தேசியவாதி என்பதால் அவர் அமெரிக்காவை குருட்டுத்தனமாக பின்பற்ற மாட்டார்” என்று பலரையும் மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரை விரிகிறது.
ஒபாமா-மோடி சந்திப்பின் பல்வேறு தாக்கங்களை குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரை, தங்கள் நிலப்பகுதிகளை ராணுவ நோக்கங்களுக்காக பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது பற்றிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் 6 அணு உலைகளை கட்டமைப்பதற்கான தயாரிப்புப் பணிகள் குறித்த தொடக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும், இருநாடுகளும் தங்களது ராணுவ உறவுகளில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக பரஸ்பரம் உறுதி எடுத்துக் கொள்ளும்.
என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முத்தாய்ப்பாக, முகாமில் ஒரு குழுவை கைவிட்டு மற்றொன்றை பிடித்துக் கொள்வதன் மூலம் இந்தியா உயர்வடைய முடியாது, பன்முக ராஜீய உறவுகளை இந்தியா வளர்த்தெடுக்க வேண்டும் என்ற தொனியில் கட்டுரை தனது கருத்தை வெளியிட்டுள்ளது.