மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் உடலைப் பிரேத பரிசோதனை நடத்தி உண்மையை கண்டறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையே வியட்நாம் பாஸ்போர்டில் வந்த பெண் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜாங் இல். இவரது இளைய மகன் கிம் ஜாங் உன் தான் தற்போதைய அதிபராக பதவியில் உள்ளார். கிம் ஜாங் இல்லுக்கு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மூலம் பிறந்தவர் தான் கிம் ஜாங் நம். இவர் தான் மூத்தவர். ஒரு கட்டத்தில் கிம் ஜாங் நம் தான் அடுத்த வாரிசு என அந்நாட்டு மக்களுக்கும் தெரிய வந்தது. அப்போது வடகொரியாவின் அடுத்த அதிபராக பொறுப் பேற்கும் முயற்சியிலும் ஜாங் நம் ஈடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் அங் கிருந்து ஜப்பானுக்கு தப்பிச் சென்றார். இடையில் கிம் ஜாங் இல் மறைந்தபோது, வடகொரியா வுக்கு ரகசியமாக வந்து சென்றார்.
இதைத் தொடர்ந்து ஜாங் இல்லின் அடுத்த வாரிசான இளைய மகன் கிம் ஜாங் உன் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார். எனினும் ஜாங் நம், ஜாங் உன் இடையே அதிகார மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மக்காவ் நாட்டில் இருந்து ஜாங் நம் அண்மையில் மலேசியா வந்திருந்தார். அங் குள்ள சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த வடகொரியாவைச் சேர்ந்த இரு பெண்கள் விஷ ஊசி செலுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட கிம் நம் உடனடியாக விமானநிலையத்தில் இருந்த வரவேற்பறைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றும்படி உதவிக் கேட்டுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இது கொலையா? அல்லது இயற்கை மரணமா? என்பதை கண்டறிய மலேசிய போலீஸார் பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படும் அந்தப் பெண்களைக் கண்டறிய, விமான நிலையத்தின் ரகசிய கேமரா பதிவுகளையும் ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை மலேசிய போலீஸார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவரிடம் வியட்நாம் பாஸ்போர்ட் இருந்தது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தென் கொரியாவின் பொறுப்பு அதிபர் வாங் யோ அன், ‘‘கிம் ஜாங் நம் படுகொலை செய்யப்பட்டார் என்பது ஊர்ஜிதமானால், வடகொரியா அதிபரின் காட்டு மிராண்டித்தனமும், பதவி வெறியும் நிச்சயம் வெளிப்படும்’’ என்றார்.