உலகம்

உலக மசாலா: நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!

செய்திப்பிரிவு

ஜப்பானில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் ஸ்டைரோஃபோம் (Styrofoam) வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்டைரோஃபோம் என்றவுடன் நாம் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டு, தம்ளர், பார்சல் கட்டும் தெர்மகோல்தான் நினைவுக்கு வரும். வீடு கட்டக்கூடிய ஸ்டைரோஃபோம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டது. இதில் கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியவை. விலை குறைந்தவை. வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை. மிக வேகமாகவும் எளிதாகவும் வீட்டைக் கட்டி முடித்துவிட முடியும். கடந்த பத்து ஆண்டுகளாகவே ஸ்டைரோஃபோம் வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் மக்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மக்களின் கவனம் இந்த வீடுகள் மீது திரும்பியிருக்கிறது. வீட்டின் எடை 80 கிலோ. பசையால் அரைக் கோள வடிவில் வீடுகள் கட்டப்படுகின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வகையில் வீட்டின் உத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே வாரத்தில் மூன்று மனிதர்களால் இந்த வீட்டை உருவாக்கிவிட முடியும். 387 சதுர அடி பரப்பளவும் 9.8 அடி உயரமும் இருக்கிறது. இந்த வீடு துரு பிடிப்பதில்லை, கரையான்களால் அரிக்கப்படுவதில்லை, நீண்ட காலம் உழைக்கக்கூடியது. வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவுவதால் குளிர்சாதன பயன்பாடும் குறைந்துவிடுகிறது. 44 லட்சத்திலிருந்து 55 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நிரந்தரமாகவும் தங்கிக்கொள்ளலாம். அல்லது ஆபத்து ஏற்படும் காலங்களில் மட்டும் தங்கிச் செல்லலாம். ஜப்பான் டோம் ஹவுஸ் நிறுவனம் ஆண்டுக்கு 100 ஸ்டைரோஃபோம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய அதிசய வீடுகள்!

புத்துணர்வு பெறுவதற்காகத்தான் காபி, தேநீர் கடைகளை மக்கள் நாடுகிறார்கள். அந்த வகையில் தென் கொரியாவிலுள்ள மிஸ்டர் ஹீலிங் கஃபேயில் வசதியான மசாஜ் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். சிறிதுநேரம் தூங்கலாம். மெல்லிய இசையை ரசிக்கலாம். அவசரம் இல்லாமல் காபியை அருந்திவிட்டு, புத்துணர்வோடு கிளம்பலாம். இந்த ஹீலிங் கஃபேவுக்கு தென் கொரியாவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. தற்போது ஆசியாவிலுள்ள பல நாடுகளில் 47 இடங்களில் ஹீலிங் கஃபே ஆரம்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. “கொரிய மக்கள் அளவுக்கு அதிகமாக உழைக்கிறார்கள். தூங்குவதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவும் விதத்தில்தான் இந்த ஹீலிங் கஃபேயை ஆரம்பித்திருக்கிறோம். வேலைகளுக்கு நடுவில், இடைவேளைகளில் இங்கே வந்து நிம்மதியாக ஓய்வெடுத்துச் செல்ல முடியும். விருப்பமுள்ளவர்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். காபி உட்பட அனைத்துக்கும் சேர்த்து 20 நிமிடங்களுக்கு 240 ரூபாய், 30 நிமிடங்களுக்கு 440 ரூபாய், 50 நிமிடங்களுக்கு 580 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், பயணிகள், முதியவர்களால் எங்கள் கஃபே எப்பொழுதும் நிறைந்திருக்கிறது” என்கிறார் கஃபே மேலாளர்.

புத்துணர்வு அளிக்கும் ஹீலிங் கஃபே!

SCROLL FOR NEXT