போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஜனநாயகப் பயிரை வளர்ப்பதில் அதிபர் ஹமீது கர்சாயின் தலைமைக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் இரண்டா வது மிகப்பெரிய நகரான காந்த காரில் இந்திய உதவியுடன் தேசிய வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய், இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் கூட்டாக இந்தப் பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில் சல்மான் குர்ஷித் பேசுகையில் கர்சாயின் கடந்த 12 ஆண்டு கால தலைமைக்கு பாராட்டு தெரிவித்தார்.
“ஆப்கானிஸ்தான் விரைவில் பொதுத் தேர்தலை எதிர்கொள் கிறது. இந்நாட்டில் ஜனநாயகம் ஆழமான வேரூன்றியுள்ளதற்கு இதுவே ஆதாரம். மேலும் இந்நாட்டில் ஜனநாயகப் பயிரை கர்சாய் தனது மிகச்சிறப்பான, துணிச்சலான தலைமையின் கீழ் எவ்வாறு வளர்த்துள்ளார் என்பதற்கும் இதுவே ஆதாரம்.
ஆயுதங்களை கைவிடும் போராட்டக் குழுக்களுக்கு மன்னிப்பு வழங்க ஆப்கன் அரசு முன்வந்துள்ளதற்கு பாராட்டுகள்.
இந்தியாவைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் வரும் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தேர்தல் களத்தில் இன்று எதிர் அணியில் இருப்பவர்கள் நாளை ஓரணயில் திரள வாய்ப்புண்டு“ என்றார் குர்ஷித்.
தற்போது திறக்கப்பட்டுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டிடப் பணிகள் இந்திய உதவியுடன் நடைபெறுகிறது. இத்திட்டத்துக்கு இந்தியா சுமார் ரூ.50 கோடி அளிப்பதாக உறுதி அளித்திருந்தது. சில கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நீடிப்ப தற்கு வகை செய்யும் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அதிபர் ஹமீது கர்சாயை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. இதனை கர்சாய் ஏற்காததால் ஆப்கானிஸ் தான் – அமெரிக்கா உறவில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குர்ஷித்தின் பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.