இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடைகளை களைந்து சோதனையிட்டது உண்மைதான். எங்களின் விதிமுறைகளின்படியே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க மார்ஷல் பிரிவு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை பொது இடத்தில் கையில் விலங்கிட்டு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரை தூதரக பாதுகாப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தின் நேரடி ஆணைகளை ஏற்றுச் செயல்படும் (மார்ஷல்) போலீஸ் பிரிவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காவல் நிலையத்துக்கு தேவயானியை அழைத்துச் சென்ற போலீஸார், அவர் அணிந்திருந்த உடையை அகற்றி சோதனை செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் முன்பு, போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டோருடன் தேவயானியை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ ரத்து செய்யப்பட்டுள்ளது. தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இதற்கு முன்பு முழுமையாக சோதனையிடாமல் உடனுக்குடன் அனுமதியளிக்கப்பட்டது. இப்போது அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் அவர்களின் பொருள்கள் அனைத்தும் உரிய சோதனை நடத்தப்பட்டு விதிமுறையின்படியே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன.
இந்தியாவுடன் பேச்சு நடத்துவோம்
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், தனது கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி புதன்கிழமை மீண்டும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியதாவது: “இந்தியாவில் இருக்கும் பலருக்கும் இது உணர்வுபூர்வமானதொரு விவகாரமாக இருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதற்கான சூழ்நிலை, உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம்.
இது ஒரு சட்ட அமலாக்கம் தொடர்பான விவகாரம். தோழமை, இருதரப்பு நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனதில் வைத்து இந்தியாவுடன் சுமுகமாக பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளோம்” என்றார்.
சோதனையிட்டது உண்மைதான்
இதற்கிடையே தேவயானியை கைது செய்த மார்ஷல் போலீஸ் பிரிவினர், அவரின் உடையை அகற்றி சோதனையிட்டதை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக அமெரிக்க மார்ஷல் போலீஸ் பிரிவு (யு.எஸ்.எம்.எஸ்.) செய்தித் தொடர்பாளர் நிக்கி கிரெடிக் பாரெட் கூறுகையில், “எங்கள் போலீஸ் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும் நடைமுறை-களின்படிதான் தேவயானி கைது செய்யப்பட்டார். அவரின் ஆடையை அகற்றி சோதனை செய்தது உண்மைதான். கைது செய்யப்பட்டவரிடம் இதுபோன்று சோதனை நடத்துவது எங்களின் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளது.
நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த மற்ற பெண் கைதிகளுடன் ஒரே அறையில் தேவயானியை அடைத்து வைத்திருந்தோம். அதுவும் விதிமுறையின்படியான நடவடிக்கைத்தான்” என்றார்.
சட்டப் பாதுகாப்பு உள்ளது
இந்த விவகாரம் குறித்து தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் என்.அர்சாக் கூறுகையில், “துணைத் தூதர் என்ற அடிப்படையில், தேவயானிக்கு தூதரக ரீதியாக சட்டப் பாதுகாப்பு உள்ளது. தூதரக அதிகாரியை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மார்ஷல் போலீஸார் கடைப்பிடிக்கவில்லை.
தேவயானியை நடு வீதியில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதன்பின் காவல் நிலையத்தில் அவரின் உடையை அகற்றி சோதனை செய்ததும் தேவையற்ற செயல்.
இது போன்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன், சம்பந்தப்பட்ட நபர் தனது
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதையும் கடைப்பிடிக்காமல், அதிரடியாக தெருவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இரு நாடுகளின் தூதரக ரீதியிலான உயர் அதிகாரிகள் கலந்தாலோசனை செய்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
'கதறி அழுதும் விடவில்லை' - தேவயானி அனுப்பிய இ-மெயில்
நியூயார்க் போலீஸாரின் அத்துமீறிய கைது மற்றும் விசாரணை நடவடிக்கையின்போது நான் பலமுறை கதறி அழுதேன் என தேவயானி கூறியுள்ளார்.
இதுகுறித்து தேவயானி டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள இமெயில் கடிதத்தில், "துணைத் தூதர் என்ற அடிப்படையில், எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை, கைது செய்த அதிகாரிகளிடம் நான் பலமுறை எடுத்துக் கூறினேன்.
என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கிட்டனர். ஆடைகளைக் களைந்தனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டிஎன்ஏ சோதனைக்காக மாதிரி எடுத்தனர். கிரிமினல்களுடனும், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனமுடைந்து பலமுறை கதறி அழுதும் விடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.