பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய இளைஞர் மீது சக கைதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். அவருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஹமீது நெஹல் அன்சாரி (31). இவருக்கும் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி கோஹட் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் மலர்ந்தது. அவர்களின் காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தபோது அந்த பெண்ணுக்கு அவசர திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்.
இதை அறிந்த ஹமீது கடந்த 2012-ம் ஆண்டில் மும்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்று அங்கிருந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. கடந்த 2015 டிசம்பரில் ராணுவ நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தற்போது பெஷாவர் சிறையில் ஹமீது அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சக கைதிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹமீதை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர், பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், சிறையில் கைதிகளுக்குள் சண்டை நடைபெறுவது வழக்கம், ஹமீதுக்கு மிகப் பெரிய காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்திய இளைஞருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் இருந்த இந்தியர் சரப்ஜித் சிங் கடந்த 2013 மே மாதம் சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.