லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்திருந்த விஜய் மல்லையாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் இந்தியாவிலிருந்து தலைமறைவானவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இங்கிலாந்து ப்ரிமிங்கம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதைக் காண, தொழிலதிபர் விஜய் மல்லையா வந்திருந்தார். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு அவரை அடையாளம் காணுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
அவரது புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார் ஒருவர். உடனே அந்தப் படம் பலரால் பகிரப்பட்டு வைரலானது. தொடர்ந்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருடன் விஜய் மல்லையா இருக்கும் படமும் பகிரப்பட்டு வைரலானது.
ஏ.என்.ஐ செய்திப்பிரிவு ட்விட்டரில் பகிர்ந்த படம்
விஜய் மல்லையா அவரது கிங்க்ஃபிஷர் நிறுவனத்துக்காக கிட்டத்தட்ட ரூ.9,000 கோடிகளை கடன் பாக்கியாக வைத்துள்ளார். அதை செலுத்த இயலாமல் கடந்த வருடம் இந்தியாவிலிருந்து தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். அந்நிய செலாவணி மோசடி, கடன் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக சிபிஐ அவரை கைது செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கேட்டுக் கொண்டதற்கிணங்க கடந்த ஏப்ரல் மாதம் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் விஜய் மல்லையாவை லண்டனில் கைது செய்தது. ஆனால் 6,50,000 பவுண்ட் நிபந்தனை ஜாமீனில் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.