மங்கோலியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இரண்டாம் சுற்றுத் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடக்கவிருக்கிறது.
எம்.பி. ஆகவும், நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் விளங்கும் மியேகொம்பின் என்க்போல்டு இத்தேர்தலில் மங்கோலிய மக்கள் கட்சியின் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறார். இவர் ஒரு குதிரை வியாபாரி. இவருக்கு எதிராகப் போட்டியிடும் கல்ட்மா படுல்கா ஒரு தொழிலதிபர் என்பதோடு ஜூடோ சாம்பியனும்கூட. ஜனநாயகக் கட்சியின் சார்பாக இவர் நிற்கிறார்.
என்க்போல்டு தேசிய ஒற்றுமையை முக்கியக் கொள்கை யாக வைத்து போட்டியிடுகிறார். படுல்கா (டொனால்டு ட்ரம்பின் தேர்தல் முழக்கம்போல) “மங்கோலியர்களுக்குதான் இங்கு முதல் உரிமை” என்பதை முக்கியப் பிரச்சாரமாக மேற்கொள்கிறார்.
வடக்கில் ரஷ்யாவையும், தெற்கில் சீனாவையும் எல்லைக ளாகக் கொண்ட மங்கோலியாவின் மக்கள் ஒருவித வெறுப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் என்க்போல்டுக்கு அதிகபட்சமாக 24 சதவீத மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் 35 சதவீத மங்கோலிய மக்கள் “எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை” என்று இந்தக் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.
70 வருடங்களாக சோவியத் நாட்டின் பாணியில் கம்யூனிஸ வகை அரசியலைப் பின்பற்றிய மங்கோலியா 1990-ல் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. ஆனால் இப்போது ஜனநாயகத்தின் மீது மங்கோலிய மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகத் தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் ஊழல்.
ஒரு வருடத்துக்கு முன் ஒரு ஒளிநாடா அங்கு பரவலானது. அதில் என்க்போல்டும் சக கட்சித் தலைவர்கள் சிலருமாகச் சேர்ந்து அரசு வேலைகளை ஆளுக்கு இவ்வளவு என்று விலை வைத்து விற்பது தொடர்பாக பேசிய காட்சிகள் பதிவாகியிருந்தன. ஒரு குமாஸ்தா வேலைக்கு இவ்வளவு என்பதிலிருந்து அமைச்சராவதற்கு இவ்வளவு என்பது வரை ‘தெளிவாகவே’ விவாதம் நடைபெற்றது. இதுபற்றிக் கேட்டபோது முதலில் அது போலி ஒளிநாடா என்று கூறிய அவர்கள் பிறகு, “அதனால் என்ன? பேசிக் கொண்டிருந்தோம். அவ்வளவுதானே, நடைமுறைப் படுத்தவில்லையே” என்றார்கள் கூலாக.
மக்களுக்கு ஏன் வெறுப்பும், விரக்தியும் வராது? ஜூலை 9 தேர்தலாவது மங்கோலியாவின் தற்போதைய நிச்சயமற்ற அரசியல் தன்மையை மாற்றுமா என்று பார்ப்போம்.