அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமேயில்லை, அதிபர் ட்ரம்பிடம் ‘ஒரு துளி கூட நிறவெறியில்லை’ என்று அமெரிக்காவில் உள்ள குடியரசு இந்துக் கூட்டணி நிறுவனர் ஷலப் ஷாலி குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதையடுத்து இந்தியர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. ஆனால் அதிபர் ட்ரம்ப் இந்தியர்களுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறார் என்று அமெரிக்காவில் உள்ள குடியரசு இந்து கூட்டணி நிறுவனர் ஷாலி குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஷலப் ஷாலி குமார் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படுபவர்களில் முதன்மையாக பரிசீலிக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தூதர் பொறுப்பு குறித்து குமார் கூறும்போது, “அது பற்றி கூற எனக்கு எதுவும் இல்லை” என்றார்.
ஆனால் இந்திய அமெரிக்க உறவுகள் பற்றி அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இதற்கு முன்னால் இல்லாத அளவுக்கு எடுத்துச் செல்வார்கள்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் கொலை குறித்து கூறும்போது, அமெரிக்காவில் நிறவெறிக்கு இடமில்லை என்றார். இதுவே இந்து-அமெரிக்கர்களுக்கு, இந்திய அமெரிக்கர்களுக்கு அளித்துள்ள உறுதி மொழியாகும்” என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே புளோரிடாவில் இந்தியருக்குச் சொந்தமான கடை ஒன்றின் மீது தாக்குதல் குறி வைக்கப்பட்டது, அதாவது 64 வயது ரிச்சர்ட் லாய்ட் என்பவர் இந்தியர் கடைக்கு தீவைக்க முயன்றார். ‘அராபியர்களை அமெரிக்காவை விட்டு விரட்டுவோம்’ என்று அவர் கூறினார். போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்தவுடன் அவர் சரணடைந்தார்.
சமீபத்திய தெற்காசிய ஆய்வு ஒன்று சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த வெறுப்பு வன்முறைகளுக்கு காரணம் அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்களே என்று கூறியது பற்றி ஷாலி குமார் கூறும்போது, “இதற்கும் ட்ரம்புக்கும் முடிச்சு போடுவது அடிப்படையற்றது. ட்ரம்பிடம் ஒரு துளி நிறவெறி கூட கிடையாது. அவரும் அவரது ஆலோசகர்களும் இந்தியாவையும் இந்துயிசத்தையும் மிகவும் நேசிப்பவர்கள்” என்றார்.
இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள அச்சத்திற்கு, “ஊடகங்களின் பாரபட்சமான செய்திகளும், அதிபருக்கு எதிரான இடதுசாரிகளின் பிரச்சாரமுமே காரணம்” என்கிறார் ஷாலி குமார்.
மேலும் இவர் கூறிய போது, அதிபர் ட்ரம்பின் தலைமை உத்தி வகுப்பாளர் ஸ்டீபன் பேனன் பகவத் கீதையின் தீவிர வாசகர், பவுத்த தத்துவத்தை வாசிப்பவர்.
மேலும் “அவர் இந்தியாவில் மோடியின் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியை பேனன் வெகுவாகப் பாராட்டுகிறார். இந்துமதம் சகிப்புத்தன்மை உடைய மதம் என்பதையும், இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டுள்ளார். அதே போல் எச்1பி விசா பற்றியும் ஊதிப்பெருக்கலான செய்திகள் வெளியாகின்றன, ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா நல்ல வளர்ச்சி காணவிருக்கிறது, அதற்கு தகவல் தொழில் நுட்பத்துறையின அவசியத்தை அவர் உணர்ந்துள்ளார், எனவே புதிய அலை அமெரிக்க வளர்ச்சியில் இந்தியர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார் அவர்.