உலகம்

புர்ஹான் வானி என்கவுண்டர்: அதிர்ச்சி அடைந்த பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்

பிடிஐ

காஷ்மீர் வன்முறை குறித்து மவுனம் சாதித்ததற்காக கடும் விமர்சனத்துக்கு ஆளான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடைசியாக மவுனம் கலைத்தார்.

புர்ஹான் வானி என்கவுண்டர் செய்யப்பட்டது தனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இருதய அறுவை சிகிச்சை முடிந்து லண்டனிலிருந்து திரும்பிய நவாஸ் ஷெரீப் கூறியதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீரி ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். மேலும் இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்தும் அவர் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அப்பாவி மக்கள் மீது இழிதகையான முறையில் அளவுக்கதிகமான வன்முறைகளை இந்திய ராணுவம் கட்டவிழ்த்து விடுவதாக அவர் தெரிவித்தார். இத்தகைய அடக்குமுறையினால் ஐ.நா.தீர்மானங்களின் படியான சுயநிர்ணய உரிமையை காஷ்மீர் மக்களிடமிருந்து பறித்து விட முடியாது.

இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி மனித உரிமைகள் கடப்பாட்டிற்கு உண்மையாக இருக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கூறும்போது, “ஷெரீப் மோடி நட்பு காஷ்மீர் விவகாரத்தில் பழுது தீர்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சாடினார்.

SCROLL FOR NEXT