இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக இந்தோனேசிய மீட்பு குழு உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை புறப்பட்ட விமானம் தனது பயணத்தை தொடங்கிய 42 நிமிடங்களில் சரியாக காலை 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மாயமான A320-200 என்ற இந்த விமானத்தில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு கைக் குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 7 பேர் கொண்ட விமானப் பணிக்குழுவினர் இருந்ததனர்.
இந்த நிலையில் விமானம் மாயமான பகுதியாக கருதப்படும் பெலிதியுங் தீவுகளுக்கு அமைந்திருக்கும் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று இந்தோனேசிய தேடல் குழுவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். விமானம் மாயமாகி 24 மணி நேரம் கடந்துள்ள நிலையில் அது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையிலும் அறியப்படவில்லை.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "தேடல் குழிவின் வியூகத்தின்படி கடற்பகுதியில் நாங்கள் எங்களது கவனத்தை செலுத்தி வருகிறோம். இது தான் விமானம் விழுந்திருக்கம் இடம் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்தக்கட்டங்களில் தேடல் இதனை மையப்படுத்தி விரிவுப்படுத்தபடலாம்" என்றார்.
ஜாவா கடற்பகுதியின் கலிமந்தன் மற்றும் பெலிதியுங் தீவுகள் உள்ள சுற்றுப்பகுதியில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேடல் நடவடிக்கையில் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.
விமானம் கடலில் விழுந்திருக்க வாய்ப்பு
ஏர்ஏசியா விமானம் புறப்பட்ட அடுத்த நிமிடங்களில் கடுமையான பனி மூட்டம் காரணமாக பாதையை மாற்றி, உயர பறக்க விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து சில நிமிடங்களில் விமானம் குறித்த தகவல்கள் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு கிடைக்கப்பெறாத நிலையில், அந்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானம் கடலில் விழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்தோனேசிய தேடல் குழு அதிகாரி தெரிவித்தார்.