இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது எமிலி லார்டர், உகாண்டாவைச் சேர்ந்த இரண்டு வயது ஆடமைத் தத்தெடுத்திருக்கிறார். “2015-ம் ஆண்டு குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றில் வேலை செய்வதற்காகத் தன்னார்வலராக உகாண்டாவுக்குச் சென்றேன். பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு 7 குழந்தைகள். கடைசிக் குழந்தையைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதனால் பிறந்து இரண்டே நாளான குழந்தையை நான் வாங்கிக்கொண்டு, எங்கள் மையத்துக்கு வந்தேன். அடுத்து 2 மாதங்கள் இரவும் பகலும் குழந்தையைக் கவனிப்பதே என் முழு நேர வேலையாக இருந்தது. இங்கிலாந்துக்குத் திரும்பும் நேரம் வந்தது. சின்னக் குழந்தையை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல், மேலும் இரண்டு மாதங்கள் தங்கினேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு பிரிட்டன் திரும்பினேன். ஆனால் குழந்தையை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. ஆசிரியராக வேலை செய்ததால் பள்ளியில் விடுமுறை விட்டவுடன் ஆடமைப் பார்க்கக் கிளம்பிவிடுவேன். ஒருகட்டத்தில் அவனை விட்டு என்னால் இருக்கவே முடியவில்லை. அவனும் நான் இங்கிலாந்து திரும்பிய பிறகு எனக்காக மிகவும் ஏங்குவதாகவும் அழுவதாகவும் தகவல் வந்துகொண்டேயிருந்தது. தத்தெடுக்க முடிவு செய்தேன். தத்தெடுக்க வேண்டும் என்றால் நான் உகாண்டாவில் பணிபுரிய வேண்டும். ஆசிரியர் வேலையை உதறி, உகாண்டாவில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். தத்தெடுக்கும் வேலைகளை ஆரம்பித்தேன். வழக்கறிஞர், நீதிமன்றம், இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கான கட்டணங்கள் என்று அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. வேறு வழியின்றி நன்கொடை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். பலரும் உதவ ஆர்வமாக இருக்கிறார்கள். விரைவில் பணம் சேர்ந்தவுடன் தத்தெடுக்கும் வேலைகளை முடித்துவிட்டு, இங்கிலாந்துக்குச் சென்றுவிடுவோம். ஆடம் என் மகனாக வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இனி அவனின்றி என் வாழ்க்கை இல்லை” என்கிறார் எமிலி லார்டர்.
நெகிழச் செய்துவிட்டார் இந்த அம்மா!
சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கத்தை விடமுடியாது. ரசாயன நகப்பூச்சுகளால் தீங்கு ஏற்படலாம் என்ற பயமும் இருக்கும். இவர்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரூபான் நிறுவனம் சாப்பிடக்கூடிய ப்ராஸிக்கோ நகப்பூச்சை உருவாக்கியிருக்கிறது. “இத்தாலிய ஒயினின் சுவையிலும் நறுமணத்திலும் தயாரிக்கப்பட் டிருக்கும் நகப்பூச்சை எல்லோரும் விரும்புவார்கள். சாப்பிடக்கூடிய நகப்பூச்சாக இருந்தாலும் அதிக வெப்பம், தீ போன்றவற்றுக்கு அருகில் வைக்கக்கூடாது. எளிதில் தீப்பிடித்துவிடும். நகங்களில் பூசிய நகப்பூச்சை மட்டுமே சுவைக்க வேண்டும். நேரடியாகப் பாட்டிலில் இருந்து அப்படியே குடித்துவிடக்கூடாது போன்ற எச்சரிக்கைகளையும் கொடுத்துவிடுகிறோம். மே மாதம் முதல் இந்த நகப்பூச்சு விற்பனைக்கு வருகிறது” என்கிறது க்ரூபான் நிறுவனம்.
நகங்களைக் கடிக்கத்தான் வேண்டுமா?