உலகம்

ஷியா பிரிவு நபரை மணந்து கொண்டதால் பாக். பெண் கொலை: முன்னாள் கணவர் ஒப்புதல் வாக்குமூலம்

பிடிஐ

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிட்டன் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கணவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால் கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 20-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் மாவட்டத்தின் மங்ளா பகுதியில் தனது பெற்றோர் இல்லத்தில் சமியா ஷாகித் (28) என்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

"கொலையுண்ட பெண்ணின் முன்னாள் கணவர் சவுத்ரி ஷகீல் இந்தக் கொலையை செய்துள்ளதாக எங்களிடம் ஒப்புக் கொண்டார், ஷியா பிரிவைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்" என்று விசாரணை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இதில் கொலையுண்ட பெண்ணின் பெற்றோருக்கு ஏதாவது பங்கிருக்கிறதா என்பதையும் போலீஸ் விசாரணை செய்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சமியா பெற்றோர் சம்மதத்துடன் சவுத்ரி ஷகீல் கொலை செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது, காரணம் ஷகீலை காப்பாற்றும் விதமாக பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை மாற்றியுள்ளனர், மேலும் சமியாவின் தந்தை குற்றத்தையே மறைக்கும் வேறொரு காரணத்தையும் கூறியதால் சந்தேகம் கடுமையாகியுள்ளது” என்று போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

சமியாவின் தந்தை முதலில் தன் மகள் மாரடைப்பினால் காலமானார் என்றும் பிறகு தற்கொலை செய்து கொண்டார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்தது போலீஸுக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இந்நிலையில் ஷகீலுடன் பெண்ணின் தந்தையையும் போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

லாகூரிலிருந்து 230 கிமீ தொலைவில் உள்ள தோக் பந்தோரி கிராமத்திற்கு சமியா ஜூலை மாதம் நடுவில் உடல் நலமில்லாத தந்தையை பார்ப்பதற்காக துபாயிலிருந்து பாகிஸ்தான் வந்தார், ஆனால் 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

சமியாவின் 2-வது கணவர் சையத் முக்தர் காசிம், தனது மனைவியை குடும்பத்தினரே கொலை செய்ததாக போலீஸில் புகார் செய்தார். என் மனைவி ஷியா மதத்துக்கு மாறிவிட்டார், இது பெற்றோருக்கு எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது என்றார் காசிம். இதனையடுத்து பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்று 2-வது கணவர் காசிம் கோரிக்கை வைத்துள்ளார்.

சமியாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டதற்கான அடையாளங்களை சுட்டியுள்ளது. சமியாவும் காசீமும் பாகிஸ்தான், பிரிட்டன் பிரஜைகளாவர். இரட்டைக் குடியுரிமை பெற்று துபாயில் 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று தாயார் அழைத்ததால் துபாயிலிருந்து ஜூலை 14-ம் தேதி அவர் பாகிஸ்தான் வந்துள்ளார், ஆனால் வரவழைத்ததே கவுரவக் கொலைக்குத்தானோ என்று சந்தேகப்படும்படியாக 20-ம் தேதி அவர் இறந்து கிடந்துள்ளார்.

வந்தவுடன் தனது தந்தைக்கு ஒன்றுமில்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கணவனுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் சமியா.

“ஜூலை 20-ம் தேதி சமியாவின் தொலைபேசி செயலில் இல்லை. அவரது உறவினர் மொபீனை தொடர்பு கொண்ட போது சமியா மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்ததாக தெரிவித்தார்” என்றார் கணவர் காசிம்.

குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறை கொலை சம்பவங்கள் பாகிஸ்தானில் பெருகி வருகிறது, இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

SCROLL FOR NEXT