அமெரிக்க ஊடகங்கள் எனக்கு எதிரி அல்ல, மக்களின் எதிரி என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி 15-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்கி இப்போது வரை அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள், ட்ரம்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய ட்ரம்ப் தடை விதித்ததை ஊடகங்கள் கடுமையாக கண்டித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப், ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நியூயார்க் டைம்ஸ், என்பிசி நியூஸ், சிபிஎஸ், சிஎன்என் ஆகிய ஊடகங்கள் எனக்கு எதிரி அல்ல. அவை மக்களின் எதிரிகள்.
வெள்ளை மாளிகையில் குழப்பம் நீடிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதில் துளியும் உண்மையில்லை. நான் கட்டுக்கோப்பாக ஆட்சி நடத்துவது எதிர்க்கட்சிக்கும் ஊடகங்களுக்கும் பிடிக்கவில்லை. அதனால் என் மீது சேற்றை வாரியிறைக்கிறார்கள். எனது ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.