தைவான் நாடாளுமன்ற மகளிர் குழு இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் ‘இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவாள் அளிப்பதன் மூலம் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது, இதனால் புதுடெல்லி கடும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவால் அளிப்பதிலிருந்து பின்வாங்கியுள்ள நிலையிலும், ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா ஆதரிக்கும் நிலையிலும், இந்தியா எங்களைத் தூண்டும் விதமாக நடந்து கொள்கிறது.
இந்தியா-தைவான் இடையே உயர்மட்ட வருகைகள் அடிக்கடி நிகழ்வதல்ல. இப்படியிருக்கும் போது தைவான் மகளிர் நாடாளுமன்ற குழுவை இந்த நேரத்தில் இந்தியா வரவேற்றது ஏன்?
தைவான், தென்சீன கடல் விவகாரம், தலாய் லாமா என்று சீனாவுடன் பேரம் பேச இந்த விவகாரங்களை வேண்டுமென்றே கையிலெடுத்து வருகிறது இந்தியா.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார ஒப்பந்தங்களுக்குப் பிறகே சீனாவின் மீதான இந்தியாவின் சந்தேகம் அதிகரித்து வருகிறது.
மிக முக்கியமான பாகிஸ்தான் - சீனா பொருளாதாரத் திட்டம், ஒரேசாலை, ஒரே முனையம் என்பதை அடிப்படையாகக் கொண்டது இதன் வழியில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதனால் பயன் தான் ஏற்படும்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் வழியாக இந்த பாக்-சீனா பொருளாதார பரிமாற்ற வழி இருப்பதால் பிரதமர் மோடியிடம் சிலர் தைவான் விவகாரத்தை கையிலெடுக்க அவரை வலியுறுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் அறிகிறோம்
மேலும் இந்தியாவில் எஃகு, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் தைவானின் இந்திய முதலீடுகள் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆனால் சீனாதான் இந்தியாவின் முக்கிய வாணிபக் கூட்டாளி. இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளினால் இந்த கூட்டுறவு கடினமாகும் சூழலை இந்தியா ஏற்படுத்தியுள்ளது”, இவ்வாறு சீன அரசு ஊடக அறிக்கை எச்சரித்துள்ளது.