அணு ஆயுத சோதனைகளால் வட கொரியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஐ செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஒபாமா கூறும்போது, "தென் கொரியாவுடன் அமெரிக்கா உடையாத உறவை கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொள்கிறேன். மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் உள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளிடமிருந்து மேலும் தனிமைப்பட போகிறது" என்றார்.
முன்னதாக அணுகுண்டை விட அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்துவிட்டோம் என்று வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்தன.
அதனை தொடர்ந்து வடகொரிய அரசு சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அதன் செயல்பாடுகள் நீடித்தன. மேலும், அமெரிக்கா மீதும் போர் தொடுப்போம் எனவும் பகிரங்கமாகவே அறிவித்தது. இதனால் ஐ.நா. மற்றும் பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தன.
ஆகஸ்ட் மாதம் வட கொரியா கடலுக்கு அடியில் இலக்கை குறிப்பார்த்து அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. வட கொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் சீனாவில் திங்கட்கிழமையன்று உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஜி 20 மாநாடு நடைபெற்றது. அப்போது வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இது உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.