மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லாகூர் போலீஸார் அவரை காலவரையற்ற தடுப்புக் காவலில் வைத்தனர். அவருடன் அவரது சகாக்கள் 4 பேரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
ஹபீஸ் சயீத் மீதான நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், "ஹபீஸ் சயீத்தின் தொண்டு நிறுவனமான ஃபலாஹ் இ இன்சானியத் பயங்கரவாத தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்தத் தொண்டு நிறுவனத்தை ரத்து செய்வது தொடர்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தடை காரணமா?
ஹபீச் சயீத் மீதான இந்த நடவடிக்கை அமெரிக்க தடையின் எதிரொலி என பாகிஸ்தான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக பதிவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை குடியுரிமைக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருங்காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் வெளியாகியது.
ஜமாத் உத் தவா போன்ற அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்ததன் அடிப்படையிலேயே ஹபீஸ் சயீத் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுந்திரி நிசார் உறுதிப்படுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜமாத் உத் தவா அமைப்பின் மீது தடை விதிப்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன.
மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘மாஸ்டர் மைண்ட்’ஆக செயல்பட்டது ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தான் என்று இந்தியா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.