உலகம்

தாய்லாந்து தேர்தல் சட்டவிரோதம் என நீதிமன்றம் அறிவிப்பு: பிரதமர் ஷினவத்ராவுக்கு பின்னடைவு

செய்திப்பிரிவு

தாய்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு அரசியல்சாசன நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பால் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டு பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு இது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி தேர்தலை சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெற்றபோது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிஅதனைப் புறக்கணித்தது.

மக்கள் வாக்களிக்க வராதபடி வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் பாதைகளைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டது. கடந்த 4 மாதங்களாக எதிர்க்கட்சியினர் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அரசு அலுவலகங்களை கைப்பற்றுவதுபோன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து தப்பியோடிய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் பிரதிநிதியாகவே பிரதமர் யிங்லக் ஷினவத்ரா செயல்பட்டு வருகிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தக்சின் தங்கைதான் யிங்லக் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT