உலகம்

உலக மசாலா: நிஜ ஹெர்குலிஸ்!

செய்திப்பிரிவு

பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயது அர்பாப் கிஸெர் ஹயட், 6 அடி 3 அங்குல உயரமும் 431.82 கிலோ எடையும் இருக்கிறார். இவரை ஹல்க் மனிதர் என்று அழைக்கின்றனர். உலகின் மிக வலிமையான மனிதர் என்று நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு டிராக்டரைக் கயிற்றால் பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார். டிராக்டரை எவ்வளவு வேகமாக இயக்கினாலும் பின் சக்கரங்கள் மட்டும் இருந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தன. “இப்படி ஒரு உடல் எனக்கு அமைந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எடை தூக்குதலிலும் மல்யுத்தத்திலும் சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கலோரிகள் என் உடலுக்குத் தேவைப்படுகின்றன. காலை உணவாக 36 முட்டைகள், மதியம் 3.5 கிலோ இறைச்சி, ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன். அளவுக்கு அதிகமான எடையால் என் உடலுக்கு இதுவரை எந்த நோயும் ஏற்பட்டதில்லை. எடை எனக்கு ஒருநாளும் சுமையாகத் தெரிந்ததில்லை” என்ற ஹயட், ஏற்கெனவே பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறார். உலக அளவில் வலிமையான மனிதராக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்.

நிஜ ஹெர்குலிஸ்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த யி லியான்ஸிக்கு 2009-ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒன்றுக்கு மேல் ஒன்றாக இரண்டு முகங்கள் இருந்தன. மரபணுக் குறைபாட்டின் காரணமாக இப்படிக் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். “குழந்தையை முதலில் பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டது. எனக்கு ஏன் இப்படி ஒரு குழந்தை பிறந்திருக்கிறது? என்னிடம் குழந்தையைக் கொடுக்க வேண்டாம் என்று மன்றாடினேன். மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பக்குவப்படுத்தினார்கள். நாங்கள் ஏழை விவசாயிகள். அறுவை சிகிச்சை செய்வதற்குப் பணம் இல்லை. வேறுவழியின்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். உறவினர்கள் குழந்தையை எங்காவது விட்டுவிடும்படிக் கூறினார்கள். என்னால் எப்படி அந்தக் காரியத்தைச் செய்யமுடியும்? எல்லோரும் முகமூடிக் குழந்தை என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்” என்று யி லியான்ஸி கூறிய தகவல் சீனா முழுவதும் பரவியது. நன்கொடைகள் குவிந் தன. “திசுக்கள், தாடை எலும்புகள் என்று முகம் முழுவதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம். இரண்டுமே வெற்றி கரமாக அமைந்தன. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எலும்புகள் சாதாரணமாக வளர்ந்திருக்கின்றனவா என்பதைக் கணிக்க முடியும். ஆனாலும் முதல் அறுவை சிகிச்சையிலேயே ஹுய்காங்கின் முகம் ஓரளவு சாதாரணமாகிவிட்டது. இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, காயங்கள் ஆறிய பின்னர் ஹுய்காங்கை நாங்கள் சந்திக்கவே இல்லை. அவன் பெற்றோர் அதற்குப் பிறகு எங்களிடம் அழைத்து வரவேயில்லை. ஹுய்காங் இன்று எப்படி இருக்கிறான் என்பதைப் பார்க்க மருத்துவ உலகமும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் வாங்.

எங்கே இருந்தாலும் நலமாக இருக்கட்டும்!

SCROLL FOR NEXT