சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படாது என்று அந்த நாட்டு அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வெற்றி பெறும். தடை உத்தரவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே அதிபர் ட்ரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக கலிபோர்னியா உட்பட 16 மாகாணங் களின் தலைமை வழக்கறிஞர்கள் (அட்டர்னி ஜெனரல்) போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தடை உத்தரவுக்கு எதிராக அந்தந்த மாகாணங்களில் நடைபெறும் வழக்குகளில் அவர்கள் ஆஜராகி தங்கள் கருத்தை வலியுறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
100 நிறுவனங்கள் வழக்கு
ஏழு நாடுகள் பயணிகள் தடை உத்தரவை எதிர்த்து கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட 100 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் கூட்டு வழக்கை தொடர்ந்துள்ளன.
தடை ஆணையால் வெளிநாடு களில் சேவையை விரிவுபடுத்த முடியவில்லை, திறமையான ஊழியர்களை ஈர்க்க முடிய வில்லை. நாட்டின் நலன் கருதி தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.