சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தங்கள் பகுதியில் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து அந்தத் தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிப்போம் என்று இரான் ஆயுதப்படைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் இரானின் 10 எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகினர். ஜைஷ் அல் அடில் என்ற சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் எல்லையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதே இவர்கள் சாவுக்குக் காரணம் என்று இரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இரான் ராணுவ மேஜர் ஜெனரல் மொகமது பக்கேரி “இத்தகைய செயல்கள் தொடர்வதை நாங்கள் இனியும் அனுமதிக்க முடியாது. எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளைக் கைது செய்க, அவர்கள் முகாம்களை அழித்தொழியுங்கள்.
மேலும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் பாகிஸ்தானில் உள்ள அவர்களது பாதுகாப்பு புகலிடங்களை தேடி அழிக்க வேண்டிவரும். அவர்கள் எங்கு இருந்தாலும் சரி கவலையில்லை” என்று எச்சரித்தார்.
2014-ம் ஆண்டு ஜைஷ் அல் அடில் தீவிரவாதிகள் இரான் எல்லைப் பாதுகாப்பு படையினர் 5 பேரை கடத்திச் சென்ற போது பாகிஸ்தானுக்கு படையை அனுப்புவோம் என்று இரான் எச்சரித்திருந்தது. அப்போது பாகிஸ்தான் இது சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது என்று கூச்சலிட்டனர். கடத்திய 5 படையினரில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர், ஒருவர் கொல்லப்பட்டார்.