உலகம்

பாகிஸ்தானில் ‘வாழும் கலை’ யோகா மையத்துக்கு தீ

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை யோகா மையத்துக்கு விஷமிகள் சிலர் சனிக்கிழமை தீ வைத்தனர்.

இஸ்லாமாபாத் புறநகரான பானி கலா பகுதியில் இம்மையம் அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “சனிக்கிழமை மாலை இதன் வளாகத்துக்குள் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்து அங்கிருந்த காவலாளிகளிடம், உள்ளே பணம் எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர். காவலாளிகள் தெரியாது என கூறியதும் அவர் களை கட்டிப்போட்டுவிட்டு கட்டிடத்துக்கு தீவைத்தனர். பிறகு தப்பியோடிவிட்டனர்” என்றனர்.

எனினும் ஆசிரம நிர்வாகி மீனா கபீனா கூறுகையில், “அந்த கும்பல் காவலாளிகளை கட்டிப்போட்டு, கட்டிடத்துக்கு தீவைத்தது. மற்றபடி காவலாளி களிடம் எதுவும் பேசவில்லை” என்றார்.

மேலும், வாழும் கலை யோகா மையம் சார்பில் சமீபத்தில் டி.வி.க்களில் ஒளிபரப் பான நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2012-ல் பாகிஸ்தான் சென்ற ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்புக்காக இந்த மையத்தை திறந்துவைத்தார். தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். உலகம் முழுவதும் 152 நாடுகளில் வாழும் கலை அமைப்பு செயல்படுகிறது.

SCROLL FOR NEXT