உலகம்

இந்தியத் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் உறுதி

செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும் என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் விஜய் தாகூர் சிங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி சக்திவேல் குமாரவேலு பஸ் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக 31 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாக சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் விஜய் தாகூர் சிங் கூறியது:

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்தியத் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இப்பணி தொடரும். இது தொடர்பாக இங்கு இந்தியத் தொழிலாளர்கள் பலரை சந்தித்துள்ளேன். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளேன்.

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் அனைத்து வகையிலான உதவிகளுக்கும் தூதரகத்தை அணுகலாம். தவறு செய்யாதவர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் எங்களிடம் உறுதியளித்துள்ளனர். அதே நேரத்தில் சட்டத்தை மீறி நடத்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இங்குள்ள சட்டத்தை மதித்து விதிகளுக்கு உள்பட்டு நடந்துகொள்ள வேண்டும். இங்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதற்காக எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. இங்கு நடத்த கலவரம் துரதிருஷ்டவசமானது. ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்றார் அவர்.

லிட்டில் இந்தியா பகுதியில் பஸ் மோதி இந்தியத் தொழிலாளர் சக்திவேல் குமாரவேலு உயிரிழந்தார். இதையடுத்து தெற்காசியாவைச் சேர்ந்த தொழி லாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையினர் 39 பேர் காயமடைந்தனர். 16 போலீஸ் வாகனங்கள் உள்பட 25 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதனிடையே கலவரம் தொடர்பாக மேலும் 4 இந்தியர்களை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கைதாகியுள்ள அனைவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசின் லூங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT