கிழக்கு அமெரிக்கப் பகுதியில் பனிப்புயல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 1,900க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆயிரக் கணக்கான பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் பெரும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால், அங்கு மோசமான பருவநிலை நிலவுகிறது. கடும் குளிர் வீசுகிறது. பிலடெல்பியா, நியூயார்க் பகுதிகளில் 20 செ.மீ. தடிமனுக்கு பனி படர்ந்துள்ளது.
பிலடெல்பியா, நியூஆர்க், நியூ ஜெர்ஸி, நியூயார்க் நகரங்களில் 1,900 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. 4,300க்கும் மேற்பட்ட விமானங்கள் மிகத் தாமதமாகப் புறப்பட்டன. கென்டகி பகுதியில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட கார் விபத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பனியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த வாகனத்தில் மோதியதில் முதிய வர் ஒருவர் உயிரிழந்தார். பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த 10 வயதுச் சிறுமி உலோகக் கம்பி குத்தியதில் படுகாயமுற்றார்.
கனெக்டிகட், டெலாவர், நியூஜெர்ஸி, ஓஹியோ, பென்சில் வேனியா, மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் பனிப்புயல் தாக்கக் கூடும் என வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..