உலகம்

அமெரிக்க வெளியுறவு இணையமைச்சராக நிஷா தேசாய் பதவியேற்பு

செய்திப்பிரிவு

தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சராக நிஷா தேசாய் பிஸ்வால் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

இப்பதவியை ஏற்றுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி டேனிஸ் மெக்டோனாக் உள்பட ஒபாமாவின் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

வியத்தகு சக்திகளை உடைய பெண் என்று நிஷாவை வர்ணித்த ஜான் கெர்ரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷா வெளியுறவு இணையமைச்சராகப் பதவி வகித்துள்ளதால், இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுவடையும். இந்தியாவில் இருந்து 6 வயதில் அமெரிக்காவுக்கு வந்த நிஷா, இப்போது அமெரிக்காவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகிவிட்டார். நிஷாவின் முன்னேற்றம் ஒரு வெற்றி சரித்திரம். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமல்ல, பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்துள்ளவர்களுக்கும் அவர் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்றார் கெர்ரி.

SCROLL FOR NEXT