உலகம்

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 3 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட நைஜீரியர்

செய்திப்பிரிவு

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய இழுவைக் கப்பலில் சமையலாளராக பணியாற்றிய ஹாரிசன் ஓட்ஜெக்பா ஒகீனை மூன்று நாள்களுக்குப் பின் நீர்மூழ்கி வீரர்கள் மீட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 26-ம் தேதி நைஜீரியாவின் அட்லாண்டிக் கடல் பரப்பில் எண்ணெய் கப்பலை இழுத்துச் செல்லும் பணியில் மூன்று இழுவைக் கப்பல்கள் ஈடுபட்டன. அதில் ஜாஸ்கான் என்ற இழுவைக் கப்பல் நீரில் மூழ்கியது. அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது கழிப்பிடத்தில் இருந்த ஹாரிசன், கப்பல் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் பாதுகாப்பான கேபின் (கப்பலில் இருந்த ஊழியர்களுக்கான அறை) ஒன்றில் நுழைந்து கதவை மூடிக்கொண்டார்.

கப்பல் 100 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்தபோதும், ஹாரிசன் தங்கியிருந்த கேபினுள் அதிர்ஷ்டவசமாக நீரில்லாத சிறிது வெற்றிடம் இருந்தது. தண்ணீரில் மிதந்தபடி அந்த வெற்றிடத்திலிருந்த குறைந்த அளவு பிராணவாயுவை சுவாசித்தபடி 3 நாள்களாக கடலில் இருந்துள்ளார் ஹாரிசன். அவரிடமிருந்த குளிர்பானம் ஒன்றை மட்டுமே குடித்து 3 நாள்களும் உயிர் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், மீட்புக் குழுவினர் ஹாரிசனை உயிருடன் மீட்டனர். அந்த கப்பலில் இருந்த 11 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த மீட்புப் பணிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட டி.சி.என் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் டோனி வாக்கர் கூறுகை யில், “ஏற்கெனவே 4 பேரின் சடலங்களை, நீரில் மூழ்கி தேடுதல் பணியில் ஈடுபட்ட எங்களின் ஊழியர்கள் மீட்டுவிட்டனர். மீட்பு நடவடிக்கைகளை கேமரா மூலம் எங்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த டி.வி. திரையில் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு கை தென்பட்டது. மற்றொரு சடலத்தின் கை என்று நினைத்து, எங்களின் நீர்மூழ்கி வீரர் அருகில் சென்றார். அந்த கையை அவர் பற்றியிழுத்தார். அப்போது ஊழியரின் கையை அந்த கை வேகமாக இழுத்தது. உடனே அவர் மிகுந்த அச்சமடைந்தார்.

பிறகுதான் தெரிந்தது, மூன்று நாள்களுக்குப் பிறகும் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பது. நைஜீரியாவைச் சேர்ந்த ஹாரிசன் ஓட்ஜெக்பா ஒகீனை எங்கள் குழு பத்திரமாக மீட்டது” என்றார்.

கடவுள் காப்பாற்றினார்

ஹாரிசன் ஓட்ஜெக்பா ஒகீன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கேபினுள் காற்றுள்ள பகுதிக்குச் சென்றதும், இடைவிடாது இறைவனை ஜெபித்தேன். கப்பல் விபத்துக்குள்ளானதற்கு முந்தைய தினம் எனது மனைவி பைபிளில் உள்ள வரிகளை எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதை நினைத்தபடி கடவுளை பிரார்த்தனை செய்தேன். நான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதன் மூலம், கடவுள் என்னை ரட்சித்துள்ளார் என்றே கருதுகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT