வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் முல்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மறியல் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 1971-ல் வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர்களால் பல்வேறு போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக ஒரு வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி முக்கியத் தலைவர் அப்துல் காதருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் தேசிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
டாக்காவில் போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நோகாலி மாவட்டத்தில் காரை ஒன்றை சுற்றி வளைத்த வன்முறையாளர்கள், சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் காரை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சில நகரங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தனர். அங்கு விரைந்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை நிகழ்வுகளால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
அப்துல் காதருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த வங்கதேச அட்டர்னி ஜெனரல் மெஹ்பூபி ஆலம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது. அதில் மாற்றம் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை. அப்துல் காதரின் குடும்பத்தினர், கருணை மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் என்றார். வங்க தேசத்தில் ஆளும் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.