கூகுளில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தற்போது 150 நாடுகளை அச்சுறுத்தியுள்ள ரேன்சம்வேர் தாக்குதலை வடகொரியாவுடன் தொடர்புபடுத்துகிறார்.
நீல் மேத்தாவின் இந்த ‘குறியீடு’ மட்டுமே இதுவரை இந்த ரேன்சம்வேர் தாக்குதலில் மிக முக்கியமான துப்பு கொடுத்துள்ளது என்று பிடிஐ செய்தி வெளியிட்டது.
வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்தான் இந்த சைபர் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் குறியீடு ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
2014 சோனி பிக்சர்ஸ் கணினிகளை ஊடுருவிய, மற்றும் வங்கதேச மத்திய வங்கி கணினிகளை ஊடுருவிய வடகொரிய ஹேக்கர்கள் கும்பலான லாசரஸ் குழுவின் அதே குறியீடு தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள ‘வான்னகிரை’மென்பொருளும் ஒன்றே என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது இந்திய வம்சாவளி ஆய்வாளர் நீல் மேத்தா கூறிய பிறகு ‘வான்னகிரை’ குறியீடும், லாசரஸ் குழுமம் ஊடுருவ உதவிய குறியீடும் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எச்சரிக்கையுடன் அணுகி வருகின்றனர்.
தாக்குதல்காரர்கள் பணம் கேட்டும் மிரட்டும் செய்தி இயந்திர மொழிபெயர்ப்பு போல் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் ஆனல் உட்வார்ட் சந்தேகிக்கிறார்.
ஆனால் நீல் மேத்தாவின் இந்த புதிய துப்பு மிகப்பெரிய அளவிலானது என்று ஆய்வாளர்கள் கருதினாலும் திறமை வாய்ந்த ஹேக்கர்கள், வடகொரியா ஹேக்கர்கள்தான் என்பது போல் சித்தரித்து விட முடியும் என்றும் சிலதரப்பினர் கூறுகின்றனர். வான்னகிரை மென்பொருள் கூட லாசரஸ் குழு முன்பு மேற்கொண்ட ஹேக்கிங் தொழில்நுட்பத்தை அப்படியே நகல் செய்ததாகக் கூட இருக்க முடியும் என்கின்றனர்.
எனவே எதையும் இப்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை, ஆனால் நீல் மேத்தா கொடுத்த துப்பு விசாரணையில் ஒரு முக்கிய பங்களிப்பு செய்துள்ளது.
மேலும் சைபர் தாக்குதலில் பெரிய அளவில் பாதிக்ப்பட்டது சீனா, அதன் பிறகு ரஷ்யா எனவே வடகொரியா தங்கள் ஆதரவு நாடுகளை இப்படி செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் வடகொரியா ஹேக்கர்களென்றால் அது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக இருக்கும், சோனி பிக்சர்ஸ் கணினிகள் ஹேக் செய்யப்பட்டது என்றால் அதற்குக் காரணம் தங்கள் அதிபர் கிம் ஜோங் உன் பற்றிய கேலித்திரைப்படம் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கும்.
வெறும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தாலும் அதிலும் இது வரை பெரிய வெற்றி கண்டுவிடவில்லை. இதுவரை 60,000 அமெரிக்க டாலர்கள் தொகையே மிரட்டலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்று கிரிமினல்கள் பயன்படுத்தும் பிட்காய்ன் கணக்குகள் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 2 லட்சம் கணினிகள் வைரஸால் முடக்கப்பட்டதற்கு இந்தத் தொகை மிகச்சிறிய தொகையாகும். சுமார் 150 நாடுகள் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.