‘‘பதான்கோட் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற் கொண்டார். அதிபர் பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் மோடி சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒபாமா மோடி இருவரும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், 2016-ல் பதான்கோட் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அவர்கள் (மோடி, ஒபாமா) வலியுறுத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஜெய்ஷ் இ முகமது, தாவூத் கம்பெனி, லஷ்கர் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும். மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க முடிவெடுத்துள்ளன.
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவுக்கு மோடி நன்றி
என்.எஸ்.ஜி. எனப்படும் அணு எரிபொருள் விநியோகக் குழுவில் உறுப்பினராக இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பு நாடானால் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் அணு ஆலைகளுக்கு தேவையான யுரேனியம் தாராளமாக கிடைக்கும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவு க்கும் இடையே ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத் தாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் 6 இடங்களில் அமெரிக்க நிறுவனம் அணுமின் நிலையங்களை அமைக்க உள்ளது.
தற்போதைய நிலையில் இந்திய அணு மின் உற்பத்தி 4 சதவீதமாக உள்ளது. புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதன் மூலம் வரும் 2050-ம் ஆண்டில் அணு மின் உற்பத்தி 25 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.