உலக முழுவதும் உள்ள இளைஞர்கள் 'போகிமான் கோ' என்ற வீடியோ கேமில் வரும் பிக்காச்சூ (pikachu) கதாபத்திரத்தைப் பிடிக்க உயிரை பணயம் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிரியாவை சேர்ந்த இருவர் 'போகிமான் கோ' புகழ் பிக்காச்சூவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலையை பிற உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கலைஞருமான காலித் அகில் 'போகிமான் கோ' வைப் பற்றி கேள்வியுற்று அவ்விளையாட்டை, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வீதிகளில் விளையாடினால் எப்படியான சூழல் இருக்கும் என்பதை, பிற உலக நாடுகளின் கண்ணோட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பியிருக்கிறார்.
இதனை அடுத்து, சிரியாவின் போர் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 'போகிமான் கோ' கதாபாத்திரமான பிக்காச்சூவை நிறுத்தியிருக்கிறார் காலித்.
உதாரணத்துக்குப் போரினால் இடிந்த தனது வீட்டின் முன் அமர்ந்திருக்கும் சிறுவனின் பக்கத்தில் சோகம் படிந்த கண்களுடன் பிக்காச்சூ கதாப்பாத்திரம் அமர்ந்திருப்பது போல் செய்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வீட்டின் முன் சிறுவனுடம் அமர் நதிருக்கும் பிக்காச்சூ
காலித் அகில் தனது வலைத்தளப் பக்கத்தில் இப்புகைப்படங்களை பகிர்ந்ததன் மூலம் அனைவரின் மனதிலும் சிரியாவைப் பற்றிய கவலையை விதைத்து வருகிறது. இது குறித்து காலித் அகில் கூறியதாவது:
''செய்திதாள்களில் 'போகிமான் கோ' விளையாட்டைப் பற்றி படித்த போதுதான் எனக்கு இந்த யோசனை வந்தது. இதற்காக சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட புகைப்படங்களை ஆராய்ந்து தேர்வு செய்து, 'போகிமான் கோ' கதாப்பாத்திரமான பிக்காச்சூவை கொண்டு வந்தேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சிரியாவில் ஏற்பட்ட போருக்கு 280,000 மக்கள் இறந்துள்ளனர். இங்கு மனித உயிர்களின் இறப்பு என்பது நாள்தோறும் வரும் செய்தியாகிவிட்டது. என்னுடைய இலக்கு என்பது ஒன்றுதான் சிரியாவில் என்ன நடக்கிறது என்று உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதனை செய்தேன்'' என்றார்.
மேலும் சிரியாவின் கிராபிக் டிசைனர் சைப் அல்டின் தஹான் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிரிய சிறுவர்கள் கையில் சோகமான முகபாவத்துடன் வரையப்பட்ட ‘போகிமான் கோ’ கதாப்பாத்திரங்கள் கீழே 'எங்களை காப்பாற்றுங்கள்' என்ற வாசகத்தை தாங்கிய பதாகைகளுடன் நிற்கின்றனர்.
கையில் 'போகிமான் கோ' பதாகைகளுடன் சிரிய சிறுவர்கள்
இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி அனைவரது கவனத்தையும் சிரியாவின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் தஹான்.
இப்புகைபடங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால்,"நான் சிரியாவைச் சேர்ந்தவன். என்னை வந்து காப்பாற்றுங்கள்" என்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பலர் இப்புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.