இராக்கின் முக்கிய நகரான மொசூலில் சுமார் 1 லட்சம் இராகியர்களை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மனிதக் கேடயமாக பயன்படுத்தி வருகிறது என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.
“மொசூலில் சுமார் 1,00,000 குடிமக்களை மனிதக் கேடயமாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பிடித்து வைத்துள்ளது, இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது” என்று ஐநா அகதிகள் முகமை பிரதிநிதி புரூனோ ஜெட்டோ ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவ ஆதரவுடன் இராக் ராணுவம் மொசூலை பிடிக்க தீவிரமாகக் களமிறங்கியது. மார்ச் மத்தியில் சுமார் 200 அப்பாவி பொதுமக்கள் அமெரிக்க வான் வழித்தாக்குதலில் பலியாகினர், உடல்களை மீட்டெடுத்த மீட்புக் குழுவினர் 2003-க்குப் பிறகு அப்பாவி மக்கள் பலியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறினர்.
இவ்வளவு அப்பாவி மக்கள் எப்படி பலியானார்கள் என்று இராக் ராணுவம் விசாரணை மேற்கொண்டது. அப்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதே நிலை இன்னமும் மொசூலில் நீடித்து வருவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது. பிரச்சினையுள்ள நாடுகளில் நகரங்களில்தான் பெரும்பாலும் இத்தகைய போர்ச்சூழல் ஏற்படுகிறது. அப்போது அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதை ஒருவரும் தடுக்க முடிவதில்லை. போராட்டக்காரர்களை ஒழிக்கிறோம், பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்பதன் பேரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயப்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி வந்தன.
அலெப்போவில் ரஷ்ய-சிரியப் படைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். சவுதி தலைமை கூட்டணிப் படைகள் ஏமனில் இதே வேலையைத்தான் செய்தது. இஸ்ரேல் லெபனான் மற்றும் காஸாவிலும் தனது போர் உத்தியை இவ்வாறுதான் நியாயப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்தான் மொசூலில் ஒரு லட்சம் பேர் மனிதக் கேடயமாக ஐஎஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருவது புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.