உலகம்

அழிந்து வரும் பூச்சி இனத்துக்கு ட்ரம்பின் பெயரை சூட்டினர் அமெரிக்க விஞ்ஞானிகள்

பிடிஐ

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கப் போகும் வேளையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியோபால்பா டொனால்ட்ரம்பி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன.

ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து இப்படிப் பெயரை வைத்துள்ளார்.

"புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்களை பாதுகாக்க வழிவகுக்கும் என்றும், மேலும் இதுநாள் வரை கவனிக்கப்படாமல் இருந்த தென் அமெரிக்காவின் பல்லுயிர்கள் மீதும் கவனம் விழும்" என்கிறார் நஸாரி.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொஹார்ட் பூச்சியியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டேவிஸிடமிருந்து பெற்ற சில மாதிரிகளை வைத்து பார்க்கும்போது தான் இதுவரை பார்த்திராத, இதற்கு முன் கண்டிராத மாதிரிகள் அவை என்பதை நஸாரி உணர்ந்துள்ளார். .

இந்த பூச்சி வகைகளையும், மற்ற ஆராய்ச்சிக்கூடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வகைகளையும் ஆராய்ந்த பின்னர், புதிய வகை பூச்சி இனைத்தை கண்டுபிடித்துள்ளதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர்.

சமீபத்தில் ஒரு புதிய வகை மீன் இனத்துக்கு பராக் ஒபாமாவின் பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT