வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 50 கி.மீ. தொலைவில் காங் தெப் தாய் கயன் பகுதி உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மா வான் நாத் (54) கடந்த 1998-ம் ஆண்டில் விபத்தில் சிக்கினார்.
உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சில மாதங்களில் குணமடைந்தார். அண்மையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அறிவுரைப்படி மருந்து, மாத்திரை சாப்பிட்டும் அவருக்கு வலி குறையவில்லை.
இதைத் தொடர்ந்து எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் 15 செ.மீ. நீளமுடைய கத்தரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. 1998-ல் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் கள், தாங்கள் பயன்படுத்திய கத்தரிக்கோலைத் தவறுதலாக அவரது வயிற்றில் வைத்து தைத்துவிட்டனர்.
அதன்பிறகு மா வான் நாத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம்போல உணவு உட் கொண்டு வந்துள்ளார். அண்மை யில்தான் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு டாக்டர்களின் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மா வான் நாத்துக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு துருப்பிடித்த நிலையில் இருந்த கத்தரிக்கோல் வெளியே எடுக்கப்பட்டது. தவறிழைத்த டாக்டர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.