உலகம்

உலக மசாலா: ஓவியங்களால் கிடைத்த பெருமை!

செய்திப்பிரிவு

துனிஷியாவின் கடற்பகுதியில் இருக்கும் ஜெர்பா தீவில் உள்ள மிகச் சிறிய கிராமம் எரியாட். ஒருகாலத்தில் கனவுத் தீவாகக் கருதப்பட்ட இந்தத் தீவு, தற்போது துனிஷியாவின் சுற்றுலாப் பட்டியலில் இல்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாக இருந்து வந்தாலும் மிகக் குறைவான வெளிநாட்டினரே சுற்றிப் பார்க்க வந்துகொண்டிருந்தனர். அதனால் பெரிய அளவில் கடைகளோ, தங்கும் விடுதிகளோ இல்லை. பெரிதாக உலகத்தின் பார்வைக்கு வராத இந்தக் கிராமம் சமீபகாலமாகச் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் அந்தக் கிராமத்து வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்தான்! 2014-ம் ஆண்டு மெஹ்டி பென் சீய்க் என்ற பாரசீக ஓவியர், 30 நாடுகளிலிருந்து நூறு ஓவியர்களை ஜெர்பாவுக்கு வரவழைத்தார். கிராமங்களில் உள்ள வீட்டுச் சுவர்களின் மீது நிரந்தரமான ஓவியங்களைத் தீட்ட வைத்தார். “அரசாங்கத்திடம் அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்குவதற்குக் கஷ்டப்பட்டேன். இந்தக் கிராமத்தில் மட்டும் 300 சுவர் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறோம். சாதாரணமான ஒரு கிராமம், இன்று மிகப் பெரிய திறந்தவெளி ஓவிய அருங்காட்சியகமாக மாறிவிட்டது. இந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். உணவு விடுதிகளும் உணவகங்களும் பெருகிவிட்டன. வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது” என்கிறார் மெஹ்டி பென் சீய்க்.

ஓவியங்களால் கிடைத்த பெருமை!

டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருகிறார் 82 வயது சுமிகோ இவாமுரோ. பகலில் உணவக உரிமையாளராக இருப்பவர், மாலையானதும் டிஜே சுமிராக் அவதாரம் எடுக்கிறார். டோக்கியோவில் உள்ள இரவு விடுதிகளில் அற்புதமான இசையை வழங்கிவருகிறார். தன்னிடம் இவ்வளவு அருமையான இசைத் திறமை இருப்பதை 12 ஆண்டுகளுக்கு முன்பு, மகனின் பிறந்தநாள் விழாவில் தான் கண்டுகொண்டார். உடனே முறையாகப் பயிற்சியில் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, டிஜேவாக மாறினார். விரைவில் டோக்கியோவின் புகழ்பெற்ற டிஜேவாக உருவாகிவிட்டார். “என்னுடைய ரசிகர்கள் எல்லாம் என்னைவிட 60 ஆண்டுகள் இளையவர்கள். ரசிகர்களுக்கும் எனக்கும் இடையே மிகப் பெரிய தலைமுறை இடைவெளி இருக்கிறது. அப்படியிருந்தும் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உணவகத்தில் உணவைக் கொடுக்கும்போதும் இசையை வழங்கும்போதும் உடனடியாக வாடிக்கையாளர்களின் உணர்வுகள் முகத்தில் தெரிந்துவிடும். என் தந்தை ஜாஸ் ட்ரம்மர். அவரிடமிருந்துதான் எனக்கு இசை ஞானம் வந்திருக்கிறது. 19 வயதில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இசையை விட்டுவிட்டு, உணவகத்தை ஆரம்பித்தேன். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலாவது இசையை வெளிப்படுத்த முடிந்ததில் திருப்தியாக உணர்கிறேன்” என்கிறார் சுமிராக்.

82 வயது டிஜே!

SCROLL FOR NEXT