ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கு மற்றும் பதவியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளில் பார்க் குவென்கனை கைது செய்ய வெள்ளிக்கிழமை சியோல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பார்க் குவென் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது குறித்து சியோல் நீதிமன்ற தரப்பில் "பார்க்கை கைது செய்யவதற்கான பல நியாயமான காரணங்கள் உள்ளன. மேலும் அவருக்கு எதிரான ஆதாரங்களும் அழிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பார்க் குவென் ஹை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும்போது ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு கூடி பார்க்குக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
பார்க் குவென் ஹை கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பார்க்கின் ஆதரவாளரை போலீஸார் இழுத்து செல்லும் காட்சி.
முன்னதாக, தென்கொரியாவின் அதிபரான பார்க் குவென் ஹை, அரசின் முக்கிய முடிவுகளை எடுக்க தனது நெருங்கிய தோழி, சோய் சூன் சில்லுக்கு அனுமதி வழங்கியதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. மேலும் அரசின் முக்கிய ஆவணங்களைப் பார்வையிடுவதற்கும், கொள்கை விவகாரங்களில் அவர் தலையிடுவதற்கும் அனுமதித்தார் என்றும் கூறப்பட்டது. இதனால் அதிபர் பார்க் குவென் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் தொடர்ந்து கண்டனப் பேரணி நடத்தி வந்தனர்.
தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தென்கொரிய நாடாளுமன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. இதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உறுதி செய்தது.
இந்த நிலையில் பார்க் குவென் ஹை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.