உலகம்

பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக மோடி, ட்ரம்ப் கூட்டுக் குரல்

செய்திப்பிரிவு

பிற நாடுகளைத் தாக்க தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தனது மண்ணில் இடமளிக்காது என அந்நாடு உறுதியளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதன்மை தலைமைச் செயல் அதிகாரிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை மோடி சந்தித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு, இருநாட்டு உறவுகள் மோடி மற்றும் ட்ரம்ப் பேச்சில் பிரதானமாகவும் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மோடி சந்தித்தார். இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர்.

இந்திய பிரதமர் மோடியின் வருகை குறித்து டர்ம்ப் பேசும்போது, "அமெரிக்காவுக்கு இந்தியா உண்மையான நண்பன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையேயான நட்பு என்பது இரு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகளால் கட்டப்பட்டது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களிலும் இதைத்தான் கூறினேன். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா என் உண்மையான நண்பனாக இருக்கும் என்றார்.

மோடி பேசும்போது," ட்ரம்ப் தலைமையின் கீழ் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, வணிகம் உட்பட பல துறைகளில் மேலும் வலுவடையும். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டாக குரல்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து மோடியும், ட்ரம்பும் கூட்டாக பேசியபோது கூறியதாவது, "பிற நாடுகளைத் தாக்க தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தன் மண்ணில் இடமளிக்காது என்று அந்நாடு உறுதியளிக்க வேண்டும். மும்பை பயங்கரவாத தாக்குதல், பதான்கோட் பயங்கரவாத தாக்குதல், இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும்" எனவும் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தினர்.

மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கவும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவும் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும் என்றும் தெரிவித்தனர்.

மோடி நெதர்லாந்து பயணம்:

அமெரிக்க பயணத்தை அடுத்து பிரதமர் மோடி நெதர்லாந்து செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT