சீக்கிய அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், சோனியா காந்தி தனது பாஸ்போர்ட் நகலை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்தாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள வசதியாக இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. 1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்துக்கு சோனியா காந்தி வந்தபோது, அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனியா தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் இல்லை என்றும் சம்மன் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் வாதிடப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 12 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோனியா காந்தி இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் அமெரிக்காவுக்கு வந்தாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, பாஸ்போர்ட் நகலை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.