தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக, வெனிசூலா தூதரக அதிகாரிகள் 3 பேரை அமெரிக்க அரசு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் ஜே கார்னே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவிலிருந்து வெளியேறு மாறு வெனிசூலா தூதரக அதிகாரிகள் 3 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி வெனிசூலாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 3 பேரை அந்த நாடு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, வெனிசூலா குடிமக்களுடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ முன்வர வேண்டும். அதைவிட்டுவிட்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது.
இது அமெரிக்காவுக்கும் வெனி சூலாவுக்கும் இடையிலான பிரச்சினை இல்லை. வெனிசூலா அரசுக்கும் அந் நாட்டு மக்களுக்கும் இடையேதான் பிரச்சினை. அந்நாட்டின் எதிர்காலத்தை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கூறி வருகிறோம்.
வெனிசூலாவுடன் சுமுகமான நட்புறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அமெரிக்க தூதரக அதிகாரிகளை அந்த நாடு திருப்பி அனுப்பியதன் மூலம் எங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.