உலகம்

அமெரிக்காவுடனான ராணுவ பயிற்சியை தென்கொரியா கைவிட வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் போர்ப் பயிற்சி நடவடிக்கைகளை தென்கொரியா கைவிட வேண்டும்.அதற்கு மறுத்தால், வட, தென் கொரியாவுக்கு இடையேயான பிரிந்து சென்ற குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்வோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வடகொரிய தேசிய பாதுகாப்புக் குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “இருதரப்பும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து பேச்சு நடத்திவரும் நிலையில், போருக்கு ஆயத்தமாவது போன்று ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையும், போர்ப் பயிற்சியும் ஒரே சமயத்தில் நடைபெற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 – 53 ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது பிரிந்த குடும்பத்தினர் ஒருவரையொருவர் சந்திக்க இயலாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் வட மற்றும் தென்கொரியா நாடுகளில் பிரிந்து கிடக்கும் குடும்பத்தினர் சந்தித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் சமீபத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன் படி, பிப்ரவரி 15 முதல் 20 வரை இருநாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு நிபந்தனை விதிக்கும்வகையில் தற்போது வடகொரியா கருத்து தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் தென்கொரியாவும், அமெரிக் காவும் இணைந்து ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள் ளன. இதை ரத்து செய்ய வடகொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ராணுவப் பயிற்சியை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தென்கொரியா அறிவித்துள் ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “இது வழக்கமான பயிற்சிதான். தென்காரியாவுடன் எங்களுக் குள்ள நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக இப்பயிற்சி நடத்தப்படு கிறது. பயிற்சியை கைவிட வாய்ப்பில்லை” என்றார்.

SCROLL FOR NEXT