சீனாவின் குன்மிங் நகரில் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கத்தியைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள குன்மிங் நகர ரயில் நிலையத்துக்குள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9 மணிக்கு கத்தியுடன் புகுந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டு அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதாகவும், 130 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் 4 பேரை போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் மேலும் சிலர் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளை போலீஸார் சுற்றி வளைத்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே நகரின் முக்கிய சாலைகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்துக்கு வெளியே நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு சட்டத் துறையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார்.