பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். இது ஒன்றும் அவருக்குப் புதிய பிரச்னை அல்ல; தெரியாத விஷயமல்ல; எதிர்பாராத சங்கதியும் அல்ல. ஆனால் பதவியைக் கொடுப்பதற்கு முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அவரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். தாலிபன்களை அடக்குங்கள். வஜிரிஸ்தான் பகுதியில் அவர்களது கொட்டம் முழுதாக அடங்கவேண்டும். தாலிபன்களை பாகிஸ்தானில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றுவதுதான் உங்கள் முன் இருக்கும் முதல் பணி.
ஆனால் தளபதியாருக்கு இப்போது தெற்கு வஜிரிஸ்தான் பகுதிவாழ் ஆதிவாசி மக்கள் விடுத்திருக்கும் செய்தி அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அன்பார்ந்த ஐயா, தாலிபன்களை ஏன் விரோதிகளாக நினைக்கிறீர்கள்? அவர்களை ஏன் வெளியாளென்று பார்க்கிறீர்கள்? அவர்கள் நம்மவர்கள். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களால் இந்தப் பகுதியில் வாழும் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, கலவரமும் இல்லை. அவர்கள் தவறாக எதையுமே செய்வதில்லை. சொல்வதெல்லாம் நல்லதுக்குத்தான், செய்வதெல்லாம் உய்வதற்குத்தான்.
தவிரவும் எங்கள் மண்ணின் பிரத்தியேகப் பிரச்னைகளை இஸ்லாமாபாத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைக் காட்டிலும் தாலி பன்கள் நன்கு அறிவார்கள். ஏனெனில் அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள். எங்களை ஆள எல்லாத் தகுதியும் கொண்டவர்கள். நீங்கள் அவர்களை விரட்டுவதாகச் சொல்லுவது எங்களை விரட்டுவதாகச் சொல்வதே ஆகும்.
ரேண்டமாகப் பத்திருபது பேரிடம் பேசிப் பார்த்தாலும் சரி. கூட்டமாகக் கூப்பிட்டு உட்கார வைத்துக் கருத்து கேட்டாலும் சரி. இதுதான். இதை மட்டும்தான் தெற்கு வஜிரிஸ்தான் பகுதி வாழ் மக்கள் சொல்கிறார்கள்.
பொதுவில் அவர்களுக்கு பாகிஸ்தான் அரசின்மீது பெருங்கோபம் இருக்கிறது. ஆப்கன் யுத்தம் தொடங்கி இன்றைக்கு வரை நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் ஒரு முக்கியத் தளமாக இருப்பது அவர்களை மிகவும் சங்கடப்படுத்துகிறது. காஃபிர்களுடன் சகாயம் செய்துகொண்டு சொந்த மண்ணின் மைந்தர்களைக் கொன்று குவிக்கும் அரசு என்பதாகத்தான் அவர்கள் இதனைப் பார்க்கிறார்கள்.
ஒரு வகையில் பாகிஸ்தான் அரசைக் காட்டிலும் தாலிபன்களே பாகிஸ்தானை ஆள ஆரம்பித்தால் நல்லது என்றே அவர்கள் கருதுகிறார்கள். வெறும் கோபத்தில், வெறுப்பில், விரக்தியில் எடுத்த முடிவல்ல இது. உண்மையிலேயே அந்த ஆதிவாசி மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். மனத்தளவில் தாலிபன்களுடன் ஒத்துப் போக முடிகிற அவர்களால் நவாஸ் ஷெரீஃப் அரசாங்கத்துடன் இணக்கம் காட்ட முடிவதில்லை.
ஐயா உங்கள் வீட்டுப் பெண்களை அவர்கள் படிக்க விடுவதில்லையே, உங்களை சுதந்தரமாக ஒன்றும் செய்ய விடுவதில்லையே, ஒரு சினிமா, டிராமா, கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு வழி இல்லையே, இருபத்தியோராம் நூற்றாண்டில் உங்களை அவர்கள் கால இயந்திரத்தில் ஏற்றி இருபதுக்கும் அதற்கு முன்னாலும் அழைத்துச் செல்கிறார்களே, இது பரவாயில்லையா? என்றால், ஆமென்கிறார்கள். இது சௌகரியமாக இருக்கிறது. சொல்லப் போனால் சுகமாகவே கூட.
இது என்ன மாதிரியான மனநிலை என்று பாகிஸ்தான் அரசுக்குப் புரியவில்லை. தாலிபன்களுக்கு இந்த மக்களின் மனோபாவம் தெரியும். அவர்கள் அலட்டிக்கொள்வதே இல்லை. பாகிஸ்தானில் எந்த அரசு மாறினாலும், யார் ராணுவத் தளபதியாக வந்தாலும், ஐ.எஸ்.ஐயின் தலைமை அதிகாரியாக யார் போய் உட்கார்ந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை; நாங்கள் இருக்கிறபடியேதான் இருப்போம் என்கிறது இந்த ஜன சமூகம்.
பழகிவிட்ட வாழ்க்கை என்பதுதான் இதன் பொருள். சுதந்தரமடைந்த நாளாக இந்த எல்லையோர மகாஜனங்கள் பக்கம் நடுவண் அரசு திரும்பிக் கூடப் பார்த்ததில்லை என்பதுதான் உள்ளுறை அர்த்தம். வேரோடிவிட்ட வெறுப்பு மனோபாவத்தை அதனால்தான் ஒன்றுமே செய்ய முடியாதிருக்கிறது.
இப்போது புதிய தளபதி வந்திருக்கிறார். இந்தப் பகுதி மக்களைப் பற்றி நன்கு அறிந்தவர்தான். தமது சர்வீசில் இந்தப் பக்கம் கொஞ்ச காலம் வேலை பார்த்தவரும்கூட. எதெல்லாம் முடியும் என்பதைக் காட்டிலும் எது முடியாது என்பது ரஹீலுக்குத் தெளிவாகத் தெரியும்.
தாலிபன்களை அணுகுவதற்கு முன்னால் இந்த மக்களுடன் அவர் பேசியாக வேண்டியதுதான் தலையாய விஷயமாக இருக்கப் போகிறது. பேசி ஒரு முடிவுக்கு வருவதற்குள் அநேகமாக அவர் பதவிக்காலம் முடிந்துவிடும் என்பது வேறு விஷயம்!